Thursday, February 3, 2011

சொல்லத்துடித்திடும் நினைவுகள், நிகழ்வுகள்.



என் இருப்பிடம் பற்றி அடிக்கடி சில சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு. மனக்கணக்கில் எழுந்த கோடுகளால் வரையறை செய்துவிட்டுப்போன “பூமத்திய இரேகைக்கு” சற்று கீழாக ஐந்துகலையில், அடுத்த புதிருக்கான வலியுடன் காத்திருக்கும் நாட்டின் சொந்தக்காரி நான்.

என்னைச்சுற்றிய தற்காலிக அமைதிகள், சூழலில் வழமைபோல மாற்றங்களை வேண்டுமானால் மாற்றிவிட்டுப்போகலாம். நான் மாறுவதாக இல்லை.
மாறும் அளவிற்கு நான் நன்றிகெட்டவளும் இல்லை. 
அதற்காக மறத்தால் கொடியவலங்கு துரத்திய வீரப்பெண்ணும் நானில்லை.

இவள் பெண்ணியம் என்ற வட்டத்தினுள், உட்கார மறுப்பவள், உயிர்தந்தவன், ஆண், என்னுள் ஓடுவதும் ஆணின் ரத்தமே. அம்மாவைவிட அப்பாவை அதிகம் நேசிக்கும் அன்பு மகள்களில் ஒருத்தி.

இதுதான் என் சுயத்தோடு ஒரு சுய எழுத்துக்கள். 
வடகப்பட்டியர் பாணியிலேயே சொல்லிவிடுகின்றேன்..
“இங்கே நான் தீட்ட நினைப்பகைவள் சித்திரங்களே
ஆனால் வருபவையோ கோடுகளாகவே இருக்கும்
ஆனால் அந்த கோடுகளும் சித்திரங்களே”

எல்லோரும் முதல்பதிவை தங்கள் தயாருக்கு சமர்ப்பிக்கின்றார்களே! இதோ என் சமர்ப்பணம், எனக்கு உயிர்தந்த என் தந்தைக்காக